பிரதமர் மோடி வருகை: மீன் பிடிக்க செல்லாததால் நிவாரண உதவி வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு


பிரதமர் மோடி வருகை: மீன் பிடிக்க செல்லாததால் நிவாரண உதவி வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 2 March 2019 11:00 PM GMT (Updated: 2 March 2019 9:22 PM GMT)

பிரதமர் மோடி வருகையையொட்டி, அரசு உத்தரவுப்படி, 2 நாள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மீன் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் அந்தோணி உள்பட பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதிக்கு 1-ந்தேதி வந்தார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஆரோக்கியபுரத்தில் இருந்து முட்டம் (கலங்கரை விளக்கம்) வரை உள்ள மீனவர்கள் பிப்ரவரி 28-ந்தேதி மற்றும் மார்ச் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மீன் பிடித்தொழிலுக்கு செல்லக்கூடாது என்றும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றவர்கள் கடலில் இருந்து கரைக்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்தது.

அரசு உத்தரவை ஏற்று ஆரோக்கியபுரம் முதல் முட்டம் வரை உள்ள விசைப்படகு, வள்ளம், கட்டுமரம் ஆகியவைகளில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 500 விசைப்படகுகள், 1250 வள்ளங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களிலும் மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவர்கள் வருவாயை இழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

விசைப்படகு மீன்பிடி தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதமும், வள்ளங்களில் மீன்பிடிக்கும் தொழிலாளருக்கு தலா ரூ.1000 வீதமும், கட்டுமரம் மீன்பிடி தொழிலாளருக்கு தலா ரூ.750 வீதமும் இரண்டு நாட்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கை அடங்கிய மனு தமிழக மீன்வளத்துறை அமைச்சர், செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Next Story