பா.ஜனதா மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் - கனிமொழி எம்.பி. பேச்சு


பா.ஜனதா மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி-மந்திதோப்பு ரோடு மைதானத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி எப்போது அகன்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க. அரசின் மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர். தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறை வருகின்றபோதும், அவரை திரும்பி போங்கள் என்று தைரியமாக கூறுகின்ற அளவுக்கு பா.ஜ.க. மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

அதே நிலைமை தான் அ.தி.மு.க.வுக்கும். அந்த 2 கட்சிகளும் இணைந்து கூட்டணி வைத்துள்ளனர். பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க. தற்போது அந்த 2 கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளது.

பல ஆண்டுகளாக முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டன. தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு ரூ.2 ஆயிரம் தருவதாக ஏமாற்றுகிறது. சரக்கு, சேவை வரி விதிப்பால் தீப்பெட்டி, கடலைமிட்டாய் உற்பத்தி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் அந்த தொழில்களை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

குடிசை தொழிலாக செய்து வந்த தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தி போன்ற தொழில்களை பெரிய நிறுவனங்கள்தான் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். படித்த இளைஞர்களுக்கும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை நாட்டை விட்டு விரட்டுங்கள். அப்போதுதான் நமது நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story