கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி மாடுகளுடன் வந்து பால் உற்பத்தியாளர்கள் சேலத்தில் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி மாடுகளுடன் வந்து பால் உற்பத்தியாளர்கள் சேலத்தில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2019 3:00 AM IST (Updated: 3 March 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சேலம் ஆவின் அலுவலகம் முன்பு மாடுகளுடன் வந்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், பால் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள ஆவின் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாதேஷ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் பொன்னுசாமி உள்பட பால் உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் தங்களது மாடுகளுடன் பங்கேற்றனர்.

பின்னர் அவர்கள், மாடுகளை சாலையில் நிறுத்திவிட்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி தங்கவேலு கூறியதாவது:-

தமிழகத்தில் 2014-ம் ஆண்டுக்கு பின் ஆவினில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் கால்நடைகளுக்கு தேவையான தீவன பொருட்களின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. தமிழக விவசாயிகளை அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஆவின் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.35 மற்றும் எருமைப்பால் லிட்டருக்கு ரூ.45 ஆகவும் உயர்த்த வேண்டும். ஆவின் நிர்வாகத்திற்கு பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு தேவையான தீவன பொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை திரும்ப வழங்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்திவிட்டார்கள். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆவின் நிர்வாகம் உடனடியாக பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story