குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.79½ லட்சம் வேளாண் எந்திரங்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்


குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.79½ லட்சம் வேளாண் எந்திரங்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 3 March 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.79½ லட்சம் மதிப்பிலான வேளாண் எந்திரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் வேளாண்மை கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தி குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கும் விழா நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்துகொண்டு 28 விவசாயிகளுக்கு ரூ.79.51 லட்சம் மதிப்பிலான வேளாண் எந்திரங்களை வழங்கினார்.  பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:–

குமரி மாவட்ட விவசாயிகள் தங்களது உற்பத்தியை இருமடங்காக பெருக்கி வருவாயை 3 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மை கூட்டுப்பண்ணையம் திட்டம் கடந்த 2017–2018–ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 2018–2019–ம் ஆண்டில் 200 உழவர் ஆர்வலர் குழுக்கள் உருவாக்கப்பட்டது. மேலும் அவர்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை கொண்டு 40 உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பட்டு வருகின்றது.

இந்த குழுக்களின் முக்கிய நோக்கம் அனைத்து குழு உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து கூட்டாக விவசாயம் செய்வதன் மூலம் இடுபொருட்களை மொத்தமாக விலை குறைத்து வாங்கலாம். குழு உறுப்பினர்கள் சாகுபடி செய்யும் விளை பொருட்களுக்கு குழுவே விலை நிர்ணயம் செய்யும்போது அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, அரசு தொகுப்பு நிதியாக ரூ.5 லட்சம் எந்திரங்கள் வாங்க வழங்குகிறது. குமரி மாவட்டத்தில் 2018–2019–ம் ஆண்டில் செயல்பட்டு வரும் 40 உழவர் உற்பத்தியாளர் குழுகளுக்கு குழு ஒன்றிற்கு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதி வீதம் ரூ.2 கோடி தொகுப்பு நிதி அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிதி மூலம் 40 குழுக்களுக்கு 250 எந்திரங்கள் வாங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முதற்கட்டமாக 22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 7 டிராக்டர்கள், ஒரு ரோட்டவேட்டர் கலப்பை, 5 பவர் டில்லர், 6 மினி டிராக்டர், 8 எந்திர களை எடுக்கும் கருவி மற்றும் ஒரு ரோட்டரி டில்லர் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஜாண் விஜு பிரகாஷ், மாநில திட்ட துணை இயக்குனர் முருகேசன் மற்றம் உழவர் உற்பத்தியாளர் குழு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) அவ்வை மீனாட்சி, வேளாண்மை அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து செய்தனர்.

Next Story