மாவட்ட செய்திகள்

மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது + "||" + Metro Rail With additional train stations Map Release The Central Government has been sent for permission

மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது

மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் வரைபடம் வெளியீடு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டது
சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கூடுதல் ரெயில் நிலையங்களுடன் மேலும் 3 வழித்தடங்களுக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னை,

மெட்ரோ ரெயில் திட்டம் சென்னையில் சுமார் 45 கி.மீ. தூரத்திற்கு 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்கள் 118.9 கி.மீ. தூரத்திற்கு புதிய வட்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணி நடந்து வருகிறது. இந்த பாதையில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.


வட சென்னையையும், தென் சென்னையையும் மெட்ரோ ரெயில் மூலம் இணைக்கும் இந்த திட்டத்தை முடிக்க 10 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த பாதை அமைப்பதற்கு உயர்த்தப்பட்ட பாதைக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலும், சுரங்கப்பாதையில் ஒரு கி.மீ.க்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரையிலும் செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.81 கி.மீ. தூரம் கொண்ட 3-வது பாதையில் 19 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட பாதையும், 26.72 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும் அமைக்கப்படுகிறது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை இடையே 26.1 கி.மீ. தூரம் கொண்ட 4-வது பாதையில் 16 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட பாதையிலும், 10.1 கி.மீ. சுரங்கப்பாதையிலும் அமைக்கப்படுகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரம் கொண்ட 5-வது பாதையில் 41 கி.மீ. உயர்த்தப்பட்ட பாதையும், 5.8 கி.மீ. சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. ஆக மொத்தம் 118.9 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் மாதவரம்- சிப்காட் மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 20 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. அதேபோல் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 18, சுரங்கப்பாதையில் 12, மாதவரம்- சோழிங்கநல்லூர் மார்க்கத்தில் உயர்த்தப்பட்ட பாதையில் 42, சுரங்கத்தில் 6 ரெயில் நிலையங்கள் உள்பட 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இந்த 3 பாதைகளும் ரூ.69 ஆயிரத்து 180 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஜப்பானில் உள்ள சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனம் உள்ளிட்ட 4 வங்கிகள் இந்த பணிக்கு கடன் அளிக்க முன்வந்துள்ளன.

தற்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அளித்த வரைபடத்தை மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதி பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளது. முறையான அனுமதி கிடைத்ததும், பணிக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோர சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
கோயம்பேடு - சோழிங்கநல்லூர் இடையிலான 52.01 கி.மீ. தூரம் கொண்ட பாதை முன்னுரிமை அடிப்படையில் எடுத்து முதலில் பணி செய்யப்பட உள்ளது. இந்த பாதையில் மண்பரிசோதனை நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி புறவழிச்சாலை - கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ. தூரம் கொண்ட பகுதிகளில் மண்பரிசோதனைக்காக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இந்த பணி 6 மாதத்தில் நிறைவடையும். இதில் மாதவரம் முதல் கொளத்தூர் வரை சுரங்கப்பாதையும், கொளத்தூர் முதல் கோயம்பேடு பஸ் நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்பட உள்ளது.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரம் கொண்ட பணியில் மாதவரம் முதல் டைட்டல் பார்க் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. தரமணி ரோட்டில் இருந்து சோழிங்கநல்லூர் வரை உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்படுகிறது. தேவையான ரெயில் பெட்டிகளை பிரான்சில் இருந்து வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிலம் எடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் பொதுபோக்குவரத்தை அதிகரிப்பதுடன், எளிதில் ஒருங்கிணைப்பு, மெட்ரோ ரெயில் மூலம் சென்னை மாநகரை இணைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.

3-வது வழித்தடத்தில் மாதவரம் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ. தூரத்துக்கு ரெயில்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் வேணுகோபால் நகர், மாதவரம் பால்பண்ணை காலனி (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவுட்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், கே.எம்.சி., சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங் ரோடு ஜங்சன், நுங்கம்பாக்கம், ஜெமினி, ஆயிரம் விளக்கு (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராதாகிருஷ்ணன் சாலை ஜங்சன், திருமயிலை மெட்ரோ (4வது வழித்தடத்தில் பரிமாற்றம்), மந்தைவெளி, கிரீன்வேஸ் ரோடு மெட்ரோ, அடையாறு ஜங்சன், அடையாறு டெப்போ, இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி லிங் ரோடு, நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), சோழிங்கநல்லூர் ஏரி, ஸ்ரீபொன்னியம்மன் கோவில், சத்தியபாமா பல்கலைக்கழகம், செயின்ட் ஜோசப் கல்லூரி, செம்மஞ்சேரி, காந்திநகர், நாவலூர், சிறுசேரி, சிப்காட்1, சிப்காட்2 ஆகிய ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

4-வது வழித்தடத்தில் கோயம்பேடு முதல் கலங்கரை விளக்கம் வரை 17.12 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பாதையில் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த பாதை மூலம் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லியும் இணைக்கப்பட உள்ளது.

இந்த பாதையில் கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் சாலை, கச்சேரி சாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் ரோடு, அடையாறு கேட் ஜங்சன், நந்தனம் (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), நடேசன் பார்க், பனகல் பார்க், கோடம்பாக்கம் மெட்ரோ, மீனாட்சி கல்லூரி, பவர் ஹவுஸ், வடபழனி, சாலிகிராமம், ஆவிச்சி பள்ளி, இளங்கோ நகர், சாய் நகர், தானிய சந்தை, கோயம்பேடு பஸ் நிலையம் (2 மற்றும் 5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்) உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

5-வது வழித்தடத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.66 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பாதை அசிசீ நகர், மஞ்சம்பாக்கம், வேல்முருகன் நகர், எம்.எம்.பி.டி., சாஸ்திரி நகர், ரெட்டேரி, கொளத்தூர், சீனிவாசநகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பஸ் நிலையம், நாதமுனி, அண்ணாநகர் டெப்போ, அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா, காளியம்மன் கோவில் தெரு, கோயம்பேடு, தானிய சந்தை, சாய்நகர், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆழப்பாக்கம், போரூர், முகலிவாக்கம், டி.எல்.எப்., சத்யா நகர், சி.டி.சி., பட்ரோடு, ஆலந்தூர், பரங்கிமலை, ஆலம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட்டு ரோடு, காமராஜ் பூங்கா தெரு, மேடவாக்கம் ஜங்சன், பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எல்காட், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இதுதவிர ஒரு சில கூடுதல் ரெயில் நிலையங்களும் வர உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.