இலவச வீட்டுமனைகள் வாங்கித்தருவதாக கூறி 13 பேரிடம் மோசடி செய்தவரை போலீசில் பெண்கள் ஒப்படைத்தனர்
தாராபுரத்தில் அரசின் இலவச வீட்டுமனைகளை வாங்கித்தருவதாக கூறி 13 பெண்களிடம் பணம் மோசடி செய்தவரை அந்த பெண்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தாராபுரம்,
தாராபுரம் காட்டூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (வயது 42). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடக்கு ரோமன் கத்தோலிக்க தெருவுக்கு சென்று, அங்குள்ள பெண்களை சந்தித்துள்ளார். அப்போது இந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை கிடைக்கப்போவதாகவும், அதிகாரிகளிடம் பேசி அனைவருக்கும் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.
ரகுபதியின் இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய பெண்கள், அவரது வழிகாட்டுதலின் பேரில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவரிடமே கொடுத்துள்ளார்கள். விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட ரகுபதி, சில நாட்கள் கழித்து ஒரு நபரை அந்த பகுதிக்கு கூட்டிச்சென்றுள்ளார். பிறகு அங்கிருந்த பெண்களிடம் அந்த நபரை அறிமுகம் செய்துவைத்து, இவர் தான் கிராம நிர்வாக அலுவலர் இவர் தான் உங்களுக்கு நிலம் வழங்கப்போகிறார். உங்களிடம் விசாரணை நடத்த வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
ஆச்சரியம் அடைந்த பெண்கள், அடையாளம் தெரியாத அந்த நபர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்கள். போகும்போது அந்த நபர் உங்கள் அனைவருக்கும் இடம் கிடைத்துவிடும், அதனால் ரகுபதி சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு மறுநாள் வந்த ரகுபதி பெண்களிடம் அதிகாரிகளுக்கு பணம் தரவேண்டும் இடம் தேவைப்படுகிறவர்கள் முன்பணமாக தலா ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் தான் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
ரகுபதி சொன்னது உண்மை என்று நினைத்து, அப்பகுதியை சேர்ந்த ரீட்டா, சாலிமோல், ரோஸ்லின்மேரி, ஜெனிபர், சத்யா, வள்ளி, அந்தோணிகண்ணு, ஜான்சிராணி உள்பட 13 பேர் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரகுபதியிடம் பணம் கொடுத்துள்ளனர். அடுத்த நாள் ரகுபதி பணம் கொடுத்த பெண்களை அழைத்துக்கொண்டு கொண்டரசம்பாளையம் அருகே உள்ள ஜீவா காலனிக்கு சென்று, அங்கே இருந்த 5 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு இடத்தை காட்டி, இங்கே தான் அரசாங்கம் உங்களுக்கு இடம் ஒதுக்கி உள்ளது. விரைவில் நிலத்தை அளந்து தனித்தனியாக கொடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் நிலம் ஒதுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த பகுதிக்குச் சென்று அருகே உள்ளவர்களிடம் இடத்தைப்பற்றி விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த இடம் வேறொருவருக்கு சொந்தமான இடம் என்பது தெரிய வந்துள்ளது. ஆத்திரம் அடைந்த பெண்கள் ரகுபதியை தேடிக்கண்டு பிடித்து பணத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளனர்.
உடனே ரகுபதி அழைத்து வந்த போலி கிராம நிர்வாக அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேசுவதுபோல் நடித்து, தாளக்கரையில் இடம் ஒதுக்கி உள்ளதாக கூறியதோடு, பெண்களை தாளக்கரைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த ஒரு பெரிய இடத்தை காட்டியுள்ளார். சில நாட்கள் கழித்து பெண்கள் அந்த இடத்திற்குச் சென்று விசாரித்தபோது, அந்த இடமும் வேறொருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் கரையூர், தளவாய்பட்டிணம் என பல இடங்களுக்கு பெண்களை அழைத்துச் சென்று இந்த இடம் தான் அரசு ஒதுக்கிய இடம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த ரகுபதி திடீரென தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சின்னக்கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ரகுபதியை, பாதிக்கப்பட்ட பெண்கள் பார்த்து பிடித்து வந்து, தாராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ரகுபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலவச வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி பெண்களிடம் பணம் மோசடி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.