திருப்பூர் கருப்பகவுண்டன்புதூரில் புரோட்டா மாஸ்டர் கத்தியால் குத்திக்கொலை வாலிபர் கைது


திருப்பூர் கருப்பகவுண்டன்புதூரில் புரோட்டா மாஸ்டர் கத்தியால் குத்திக்கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-04T01:10:28+05:30)

திருப்பூர் கருப்பகவுண்டன்புதூரில் ஓட்டலில் வேலை பார்த்த புரோட்டா மாஸ்டரை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீரபாண்டி,

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருப்பூர் பல்லடம் ரோடு கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அதே பகுதியில் ஓட்டலும், அதன் அருகே ஒரு பேக்கரியும் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சிவகங்கை மாவட்டம் மரக்குளத்தை சேர்ந்த பாண்டி (வயது 43)புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஓட்டலின் அருகே உள்ள பேக்கரியில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னாபுரம் சித்தூரை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஆறுமுகம் (25) டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். பாண்டியனுக்கும், ஆறுமுகத்திற்கும் திருமணமாகி தலா 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் சொந்த ஊர்களில் இருக்கிறார்கள். இருவரும் ஓட்டல் அருகே அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த ஓட்டலும், பேக்கரியும் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பாண்டிக்கும், ஆறுமுகத்திற்கும் கடையில் ஸ்பீக்கர் வைத்து பாட்டுப்போடுவதில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் பாண்டியிடம், ஆறுமுகம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் நேற்றுமாலை 6 மணி அளவில் மது குடித்து விட்டு வந்து பாண்டியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கடையில் இருந்த வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து பாண்டியின் கழுத்து முகம் மற்றும் மார்பில் சரமாரியாக குத்தியாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் பாண்டி சரிந்து விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் உ டனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை பிடித்து கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடை உரிமையாளர் சுப்பிரமணியத்திடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். புரோட்டா மாஸ்டரை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story