கோட்டக்குப்பத்தில் ஒரேநாள் இரவில் பர்னிச்சர், விறகு கடை, ஆட்டோவுக்கு தீ வைப்பு


கோட்டக்குப்பத்தில் ஒரேநாள் இரவில் பர்னிச்சர், விறகு கடை, ஆட்டோவுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 4 March 2019 3:15 AM IST (Updated: 4 March 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்குப்பத்தில் ஒரே நாள் இரவில் பர்னிச்சர், விறகு கடை மற்றும் ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் யூசப் அலி, கிழக்கு கடற்கரை சாலையோரம் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். கடையின் உள்ளேயும், வெளியேயும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தினமும் இரவு கடையை அடைக்கும்போது, வெளியே உள்ள பொருட்களை துணியால் மூடிவிட்டு செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் யூசப் அலி கடையை அடைத்துவிட்டு, வெளியே இருந்த பொருட்களை துணியால் மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் கடையின் வெளியே இருந்த பொருட்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதே பகுதியில் உள்ளது ரபீக் என்பவரின் விறகு கடையும் தீயில் எரிந்தது. இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள், வானூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்குள் பர்னிச்சர் கடையின் வெளியே இருந்த பொருட்கள் மற்றும் விறகு கட்டைகள் எரிந்து சாம்பலானது.

இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கோட்டக்குப்பம் கோவில்மேடு பகுதியை சேர்ந்த பசீர் முகமது என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதை அறிந்த பசீர் முகமது மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தண்ணீர் ஊற்றி ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்குள் ஆட்டோவின் மேற்பகுதி எரிந்து சேதமடைந்தது.

இந்த தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக மர்மநபர்கள் பர்னிச்சர் கடை உள்பட 3 இடங்களில் தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இது தொடர்பாக கோட்டக்குப்பம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story