கரையாம்புத்தூர் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு புகார் தெரிவிக்க திரண்ட பெண்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு
கரையாம்புத்தூர் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். அவரிடம் புகார் தெரிவிக்க திரண்ட பெண்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்,
கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருக்கும் வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி நேற்று காலை 7.30 மணிக்கு கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் கவர்னர் மாளிகையில் இருந்து புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) பஸ்சில் கரையாம்புத்தூர் ஒடப்பேரிக்கு ஆய்வு நடத்த சென்றார்.
ஏரியை பார்வையிட்ட கிரண்பெடி, பராமரிப்பு பணிகள் நடைபெறாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியாளரை கவர்னர் கண்டித்தார். அப்போது போதுமான நிதி இல்லாததால் பராமரிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு தன்னார்வலர்கள் மூலம் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கிரண்பெடி அறிவுறுத்தினார். ஒரு ஆண்டுக்குள் இந்த ஏரியின் சிறிய மற்றும் பெரிய கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும், இந்த பணிகளை தலைமை பொறியாளர் கண்காணித்து, கவர்னர் மாளிகைக்கு தெரியபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆய்வை முடித்துக்கொண்டு, அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலுக்கு கவர்னர் சென்றார். பின்னர் அங்கிருந்து பனையடிக்குப்பம் ஏரிக்கு சென்று ஆய்வு செய்துவிட்டு, பாகூர் வழியாக புதுவைக்கு புறப்பட்டுச்சென்றார்.
ஆய்வின்போது கவர்னரை சந்தித்து புகார் தெரிவிக்க 30–க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டிருந்தனர். அவர்களை கவர்னர் அருகில் செல்லவிடாமல் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.