கார் டிரைவர் சாவில் திடீர் திருப்பம்: ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடை விதித்ததால் விஷம் குடித்து தற்கொலை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


கார் டிரைவர் சாவில் திடீர் திருப்பம்: ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடை விதித்ததால் விஷம் குடித்து தற்கொலை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 3 March 2019 11:30 PM GMT (Updated: 2019-03-04T01:53:17+05:30)

நாமக்கல்லில் சாக்கடை கால்வாயில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, ஜல்லிக்கட்டில் பங்கேற்க அவரது குடும்பத்தினர் தடை விதித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது.

நாமக்கல், 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருத்தபுளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் அருண் பாண்டியன் (வயது 27). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் நாமக்கல் காவேட்டிப்பட்டியில் சாக்கடை கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் அவரது பிணத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அருண் பாண்டியன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார் மேலும் கூறியதாவது:-

அருண் பாண்டியன் மாடுபிடி வீரராக இருந்து உள்ளார். அவர் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அருண்பாண்டியன் படுகாயம் அடைந்து உள்ளார்.

எனவே அவரது குடும்பத்தினர் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடை விதித்து உள்ளனர். இருப்பினும் மேலூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்பேன் என அருண் பாண்டியன் கூறியதால் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அருண்பாண்டியன், தான் ஏற்கனவே வேலை செய்த காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த செங்கோடனிடம் ரூ.500 வாங்கி கொண்டு, அதில் மது மற்றும் விஷம் வாங்கி கலந்து குடித்து தற்கொலை செய்து உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story