திருச்சியில் அரசியல் உரிமை மீட்பு மாநாடு: முத்தரையர்களுக்கு முன்னுரிமை அளிக்காத திராவிட கட்சிகளுக்கு ஆதரவு இல்லை


திருச்சியில் அரசியல் உரிமை மீட்பு மாநாடு: முத்தரையர்களுக்கு முன்னுரிமை அளிக்காத திராவிட கட்சிகளுக்கு ஆதரவு இல்லை
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-04T01:57:14+05:30)

முத்தரையர்களுக்கு முன்னுரிமை அளிக்காத திராவிட கட்சிகளுக்கு ஆதரவு இல்லை என்று முத்தரையர்களின் அரசியல் உரிமை மீட்பு மாநாட்டில் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பேசினார்.

திருச்சி,

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், அரசியல் உரிமை மீட்பு மாநாடு நேற்று இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் நடந்தது. நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமை தாங்கி பேசினார். மத்திய மண்டல பொறுப்பாளர் கை.து.குணா வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட தலைவர் கி.சி.பா.பெரியண்ணன் வாழ்த்தி பேசினார். மன்னார்குடி செண்டலங்கர செண்பக மன்னர் ஜீயர் சுவாமிகள், கும்பகோணம் ஞானபீட சுவாமி கோரக்கர், துருசுப்பட்டி சித்த ஆசிரம யோகி சிவபிரமானந்தா சரஸ்வதி ஆகியோர் ஆசியுரை வழங்கி பேசினர்.

மாநாட்டில் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பேசியதாவது:-

ஆயிரம் ஆண்டு காலம் செரிந்த இந்த சமுதாயம் காலம் காலமாக ஓட்டு மட்டுமே போட வேண்டும். எதுவுமே பேசக்கூடாது என்ற நிலையில் வைத்து விட்டார்கள். தேர்தல் வருகிறது என்றதும், ஒரு சமுதாயம் மாநாடு நடத்தியது. அதில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு, அந்த சமுதாயத்திற்கு வேண்டியதை செய்வதாக மேடையிலேயே உறுதி கூறுகிறார். திராவிட கட்சிகள் அரசியலிலும், ஆட்சியிலும் இருப்பதற்கு காரணம் முத்தரையர் சமுதாயம்தான்.

முத்தரையர்கள் இதுபோல ஒன்றாக கூடி 15 ஆண்டுகள் இருக்கும். தமிழகத்தில் எங்காவது முத்தரையர் பாதிக்கப்பட்டால் அங்கு வீரமுத்தரையர் சமுதாயம் அவர்களுக்கு காவல் அரணாக இருக்கும்.

இந்த மாநாட்டுக்கு பின்னர் வீரமுத்தரையர் சமுதாயத்திற்கு ஒரு வலுவான தலைமை அமையும் என நம்புகிறேன். 72 ஆண்டுகால அரசியலில், நம்மால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை. எனவே, இனி நாம் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில் மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட பதவிகளில் முத்தரையர்களுக்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதை மறுக்கிற திராவிட கட்சிகளுக்கு இனி ஆதரவு இல்லை.

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபத்துடன் கூடிய நூலகம் அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சமுதாய மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முத்தரையர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக இருக்கிற சிவகங்கை உள்ளிட்ட 2 எம்.பி. தொகுதியில் தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால், தமிழகம் முழுவதும் ஆதரவு அளிப்போம். திராவிட கட்சிகளிடம் இனி ஏமாந்தது போதும். இந்த மாநாடு மூலம் அரசியல் உரிமையை மீட்டு விட்டோம். இந்த நாளில் இருந்து நாமும் அரசியலுக்கு வந்து விட்டோம். இனி மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம். சிறிய சங்கங்கள் அதை கலைத்து விட்டு வந்தால் முக்கிய பொறுப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கே.கே.செல்வகுமாருக்கு ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டும், 3 வீரவாள்களும் நினைவு பரிசாக மேடையில் வழங்கப்பட்டன. முன்னதாக மாநாட்டில் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜேஷ், மாநில வக்கீல் பிரிவு அமைப்பாளர் சந்தர், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பெ.வைரவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாலாஜி, செய்தி தொடர்பாளர் ராஜா, ராமநாதபுரம் நித்யா உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story