நிவாரண பொருட்கள் வாங்கியவர்களுக்கே மீண்டும் டோக்கன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


நிவாரண பொருட்கள் வாங்கியவர்களுக்கே மீண்டும் டோக்கன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலத்தில் நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டவர்களுக்கே மீண்டும் டோக்கன்களுடன் பொருட்கள் வாங்க வந்ததால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்று. இந்த ஊராட்சியில் கஜா புயலால் வீடுகள், மரங்கள், விவசாயம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு வழங்கிய வீடுகளுக்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட பலருக்கும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் கூறிவந்த நிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதிலும் பலருக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. அதனால் கூடுதலாக பொருட்கள் வந்தவுடன் கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்ததுடன் விண்ணப்பங்களும் பெற்றுச் சென்றனர்.

இந்த நிலையில் நிவாரண பொருட்கள் கிடைக்காதவர்களில் சுமார் 120 பேருக்கு மீண்டும் நிவாரண பொருட்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 50 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு நேற்று காலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த தகவல் அறிந்து இதுவரை நிவாரண பொருட்கள் கிடைக்காத பாதிக்கப்பட்ட மக்களும் அங்கு குவிந்தனர். ஆனால் டோக்கனுடன் காத்திருந்தவர்களின் வரிசையில் பலர் கடந்த முறை நிவாரணப் பொருட்கள் வாங்கியவர்களும் நிற்பதை பார்த்த பொதுமக்கள் இது பற்றி அங்கிருந்த வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சரியான பதில் சொல்லவில்லை என்பதால் பொதுமக்கள் ஏராள மானோர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில் டோக்கன் வழங்கிய கிராம உதவியாளர் அங்கிருந்து வெளியேறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம், அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் கிடைக்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் கொடுத்தவர்களுக்கே மீண்டும் நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது பற்றி வருவாய்த்துறையினர் கூறுகையில், 120 நிவாரண பெட்டிகள் உள்ளது. அதில் 50 டோக்கன் கொடுத்துவிட்டோம். மீதம் 70 பேருக்கு வரவர கொடுப்பதற்காக காத்திருந்த நேரத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் ஏற்கனவே கொடுத்தவர்களுக்கு நிவாரண பெட்டிகளுக்கான டோக்கன் வழங்கவில்லை. பொருட்கள் கிடைக்காதவர்களுக்கு கொடுத்த டோக்கன்களை முன்பு பொருள் வாங்கியவர்களே டோக்கன் கொண்டு வந்தனர் என்று கூறினர். 

Next Story