திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 3 March 2019 10:30 PM GMT (Updated: 3 March 2019 8:39 PM GMT)

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 24-ந் தேதி பூச்சொரிதல் நடைபெற்றது. இதையொட்டி அன்று இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் இரவு கொட்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு மாசி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்தார். இதில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் நேற்று காலை முதல் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவின் முக்கிய நாளான வருகிற 11-ந் தேதி மாலை 5 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். திருவப்பூர் கோவில் மாசி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். 

Next Story