கோத்தகிரியில் பலத்த மழை, காய்கறி குளிர்பதன கிடங்கின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


கோத்தகிரியில் பலத்த மழை, காய்கறி குளிர்பதன கிடங்கின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 4 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பலத்த மழை காரணமாக காய்கறி குளிர்பதன கிடங்கின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

கோத்தகிரி,

தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகில் காய்கறி குளிர்பதன கிடங்கு ரூ.4½ கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கிடங்கு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் காய்கறி குளிர்பதன கிடங்கு வளாகத்துக்குள் வழிந்தோடி தேங்கியது. இதன் காரணமாக அங்கு கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் ஒரு பகுதி வலுவிழந்து இடிந்து விழுந்தது. மேலும் தடுப்புச்சுவரின் பிற பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கட்டிட இடிபாடுகளை அகற்றி, சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,

மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்புச்சுவர் அதிக உயரத்துடன் கட்டப்பட்டு இருந்தது. எனவே மழைநீர் தேங்கியதும் வலுவிழந்து இடிந்து விட்டது. பணிகள் தரமின்றி மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதுகுறித்து வேளாண் வணிகத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகிறோம். தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து நாளை(இன்று) கோவை மற்றும் குன்னூரில் இருந்து வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story