மராட்டிய- கர்நாடக எல்லையில் வசிக்கும் மராத்தா இளைஞர்களுக்கும் இடஒதுக்கீடு முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு


மராட்டிய- கர்நாடக எல்லையில் வசிக்கும் மராத்தா இளைஞர்களுக்கும் இடஒதுக்கீடு முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-04T04:08:29+05:30)

மராட்டிய-கர்நாடக எல்லையில் உள்ள மராத்தா இளைஞர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை, 

மராட்டிய எல்லையையொட்டி கர்நாடக ஆட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மராட்டியம், கர்நாடகம் இடையே பல ஆண்டு காலமாக தகராறு இருந்து வருகிறது.

இந்த எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் மராட்டிய- கர்நாடக எல்லை பிரச்சினை குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், தொழிற்துறை மந்திரி சுபாஷ் தேசாய் மற்றும் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டத்தில் மராட்டிய- கர்நாடக எல்லை பிரச்சினையில் நிலவும் பல்வேறு சட்டசிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் எல்லை பிரச்சினையில் மராட்டியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாட கூடுதல் வக்கீல் ஒருவரை பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் எல்லையில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் கிராமங்களை சேர்ந்த மராத்தா இளைஞர்களுக்கும் மாநில அரசு சமீபத்தில் கொண்டு வந்த 16 சதவீத இடஒதுக்கீட்டின் பலனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தனஞ்செய் முண்டே அளித்த பேட்டியில், “கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேர்மறையான ஆலோசனை நடத்தப்பட்டது.

மராட்டிய-கர்நாடக எல்லையோரம் இருக்கும் 865 கிராமங்களை சேர்ந்த மராத்தா இளைஞர்களை 16 சதவீத இடஒதுக்கீட்டில் இணைக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு அன்னபாவு சேத் நிதி கழகத்தின் சார்பில் உதவி வழங்கவும் கேட்டுக்கொண்டேன்,’’ என்றார்.

Next Story