நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டங்கள் இடையேயான பணிமாறுதல் ஆணையை செயல்படுத்த கூடாது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கலெக்டரிடம் மனு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டங்கள் இடையேயான பணிமாறுதல் ஆணையை செயல்படுத்த கூடாது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 4 March 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டங்கள் இடையேயான பணிமாறுதல் ஆணையை செயல்படுத்த கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல், 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 38 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேலம், ஈரோடு, மற்றும் கரூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த இடமாறுதல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

முதன்மை தேர்தல் அலுவலரின் அழுத்தத்தின் காரணமாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் இரவோடு, இரவாக தேர்தலை முன்னிட்டு மாவட்டங்கள் இடையே பணிமாறுதல் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடையே அதிர்ச்சியையும், கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் மாவட்டத்தில் வருவாய் துறையினரால் மட்டுமே அனைத்து நிலைகளிலும் நேரடியாக கையாளப்பட்டு வருகின்ற நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்களையும் மாவட்ட மாறுதல் செய்யாமல், தேர்தல்களில் நேரடி தொடர்புடைய தாசில்தார்கள் மட்டுமே மாவட்ட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறான நிலையில் கடந்த கால தேர்தல்களில் ஈடுபடுத்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பாரபட்சமற்ற தேர்தல் அணுகுமுறை குறித்தோ அல்லது அவர்களின் செயல்பாடுகள் குறித்தோ பொதுவாகவோ அல்லது குறிப்பிடத்தக்க வகையிலோ எந்தவொரு அரசியல் கட்சிகளினாலோ, மக்கள் பிரதிநிதிகளினாலோ அல்லது பொது மக்களாலோ எவ்வித புகாரோ, முறையீடோ, சந்தேகமோ எழுப்பப்படாத நிலையில், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் மாவட்டங்கள் இடையே பணிமாறுதல் செய்து உள்ள நடவடிக்கையானது அலுவலர்களின் நலனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளின் முன்னேற்ற நிலையிலும் கடுமையான பின்னடைவினை ஏற்படுத்தி விடும். பொது தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி, திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்படையும் நிலையும் உருவாகி உள்ளது.

எனவே பொதுத் தேர்தல் பணிகளில் எவ்விதத்திலும் நேரடி தொடர்பு இல்லாத வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்டங்கள் இடையே பணிமாறுதல் செய்வது என்பது நிர்வாக சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதை முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மீண்டும் வலியுறுத்தி கடிதம் அனுப்ப வேண்டும். அதன் மீது முதன்மை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து தகவல் வரும் வரையில், வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாவட்டங்கள் இடையே பணிமாறுதல் செய்து பிறப்பித்து உள்ள ஆணையினை செயல்படுத்தாது நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Next Story