கலெக்டர் அலுவலகத்துக்கு ரேஷன், ஆதார் அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு ரேஷன், ஆதார் அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் 2-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இலவச பட்டா வழங்காததால் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளே செல்ல முயன்றனர்.
இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் 5 பேரை மட்டும் மனு கொடுக்க போலீசார் அனுமதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அந்த பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த தனி நபர் நிலத்தை அபகரித்து உள்ளார். இதனால் நிலம் வழங்க முடியாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், தனி நபருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் மனு அளிக்க வந்ததால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கலெக்டரை சந்திக்கவிடாமல் விரட்டுகிறார்கள். எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்காவிட்டால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைத்துவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story