அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.8 ஆயிரம் நிர்ணயம் ஏ.ஐ.டி.யூ.சி. வலியுறுத்தல்


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.8 ஆயிரம் நிர்ணயம் ஏ.ஐ.டி.யூ.சி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.8 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்,

திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை தலைவர் புண்ணீஸ்வரன், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கவுதமன், அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காந்தி, சாலையோர பழக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் சங்க தலைவர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஏ.ஐ.டி.யூ.சி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.8 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு 60 வயதான அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பணி என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் நல சட்டத்தை சிதைக்க கூடாது. பெண்கள் மீதான வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும். பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் தேங்கி கிடக்கும் விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகளுக்கு பாதுகாப்பான இடத்தில் கடை அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

Next Story