கும்பல் பாலியல் தொல்லையால் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்


கும்பல் பாலியல் தொல்லையால் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 3:45 AM IST (Updated: 5 March 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லையால் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்.

வசாய், 

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா கிழக்கு பகுதியை சேர்ந்த 29 வயது பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மார்க்கெட்டிற்கு செல்லும் போது ஒரு கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண் கணவரிடம் கூறினார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பெண்ணுடன் அவரது கணவரும் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்த அந்த பெண்ணின் கணவரையும் அந்த கும்பல் தாக்கியது. இதை தடுக்க முயன்ற அவரது 2 நண்பர்களையும் அந்த கும்பலினர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர்களும் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் பற்றி துலிஞ்ச் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் தங்கள் மீது கொடுத்த வழக்கை திரும்ப பெறவேண்டும். இல்லையெனில் முகத்தில் திராவகத்தை வீசி விடுவோம் என அந்த கும்பல் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பெண் நேற்றுமுன்தினம் வீட்டில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அந்த பெண்ணை அவரது கணவர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த 2 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. போலீசார் அதை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story