அரியலூர் மாவட்டங்களில் வளர்ச்சித்திட்ட பணிகள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்


அரியலூர் மாவட்டங்களில் வளர்ச்சித்திட்ட பணிகள் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 4 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-05T01:55:47+05:30)

அரியலூர் மாவட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியிலிருந்து வேப்படிபாலக்காடு வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதேபோல் அரும்பாவூர் பேரூராட்சியில் 4-வது மற்றும் 14-வது வார்டு பகுதியில் தெருக்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சாலை மற்றும் தெருக்களை சீரமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பூலாம்பாடி- வேப்படிபாலக்காடு சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் மாநில நிதியிலிருந்து ரூ.2 கோடியே 83 லட்சமும், அரும்பாவூர் பேரூராட்சியில் தெருக்களை சீரமைக்க ரூ.50 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.3 கோடியே 33 லட்சத்தில் சாலை மற்றும் தெருக்கள் சீரமைப்பு பணிகளை தொடங்க பூமிபூஜை நடைபெற்றது. இதில் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார். இதில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், தழுதாழை ஊராட்சி செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சியம்மன் கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இதைத்தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் உடையார்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பணி மேற்பார்வையாளர் ரமேஷ், நகர செயலாளர் பெருமாள், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செந்துறை அருகே இருங்களாக்குறிச்சி பகுதியில் ஆணைவாரி ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து வலியுறுத்திய குன்னம் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று அந்த பகுதியில் சுரங்க நலத்திட்ட நிதியில் இருந்து தடுப்பணை கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இருங்களாக்குறிச்சி அருகே உள்ள ஆணைவாரி ஓடையில் ரூ.2 கோடியே 95 லட்சத்தில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரியலூர் மாவட்ட மருதையாறுவடிநில செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி பொறியாளர் தியாகராஜன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்பட அ.தி.மு.க.வினரும், விவசாயிகளும் கலந்து கொண்டு பூஜை செய்து தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். 

Next Story