அரிமளம் அருகே நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழா விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு


அரிமளம் அருகே நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழா விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 4 March 2019 8:52 PM GMT)

அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய வழிபாடு நடத்தினார்கள்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி பிரசன்னநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி புதுக்கோட்டை, பட்டுகோட்டை, பேராவூரணி, அரசர்குளம், அறந்தாங்கி, நாகுடி, காரைக்குடி, நச்சாந்துபட்டி, குழிப்பிறை, பள்ளத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிவித்து, விரதம் இருந்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

தொடர்ந்து இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4 மணி ஆகிய நேரங்களில் 4 கால பூஜை நடைபெற்றது. இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவராத்திரி விழாவையொட்டி நெடுங்குடி திருப்பணி அன்னதானக்குழு மற்றும் நன்கொடையாளர்கள் சார்பில் இரவு 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையொட்டி நெடுங்குடி கைலாசபுரம் முத்துமாரியம்மன் கோவில் முன்பு கைலாசபுரம் மக்கள் சார்பில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல அரிமளம் ஒன்றியம் மேல்நிலைபட்டி கிராமத்தில் உள்ள மென்னாண்டார் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைநடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

அரிமளம் ஒன்றியம் ஒணாங்குடி ஊராட்சி சத்திரம் கிராமத்தில் உள்ள காமாட்சிஅம்மன் கோவிலில் சிவராத்திரியையொட்டி பாட்டையா குரு பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணி அளவில் ஜெயவிளங்கி அம்மன் கோவில் அருகில் இருந்து திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். இதேபோல சில பக்தர்கள் சாமியின் வேடமணிந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 10 மணிக்கு வான வேடிக்கை நடந்தது. தொடர்ந்து கோவில் பூசாரிகள் காமாட்சி அம்மன் கரகம் ஏந்தியும், அக்னி சட்டி ஏந்தியும் திருவீதி உலா வந்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story