முசிறியில் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


முசிறியில் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 5 March 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

முசிறியில் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முசிறி,

முசிறி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பேரூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையநல்லூர், இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுமார் 400 பேருக்கு 100 நாள் வேலை திட்டம் என்று கூறப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த சில வாரங்களாக வேலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஏராளமான தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேற்று முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை தருவதில்லை. சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்க வேண்டும். பேரூர், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story