திருவட்டார் அருகே பரபரப்பு ரூ.35 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


திருவட்டார் அருகே பரபரப்பு ரூ.35 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 March 2019 4:45 AM IST (Updated: 5 March 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே ரூ.35 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். குடோனில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு விற்றது அம்பலமாகி உள்ளது.

குழித்துறை,

குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா தலைமையிலான போலீசார் திக்குறிச்சி மகாதேவர் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் மறித்தனர். உடனே காரில் இருந்தவர்கள் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தக்கலை சரல் விளையை சேர்ந்த ரம்சாத் (வயது 23), ஆசிப்ராஜா (35) என்பது தெரிய வந்தது. காரில் 20 மூடைகள் இருந்தன. அதுபற்றி விசாரித்த போது, 20 மூடைகளிலும் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. உடனே போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 2 பேரையும் பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

அவர்களிடம் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நடத்திய கிடுக்கிப்பிடி மேல் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியா யின. அதன் விவரம் வருமாறு:-

திருவட்டார் பகுதியில் இருந்து காரில் குட்கா பொருட்களை கொண்டு வந்து உள்ளனர். மேலும் அங்குள்ள ஒரு குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து கடைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

உடனே அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 210-க்கும் மேற்பட்ட மூடைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.35 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் குட்கா பதுக்கி வைக்கப்பட்ட குடோன் தக்கலை பகுதியை சேர்ந்த முகமது அலி (40) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர்தான் குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்சாத், ஆசிப்ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான முகமது அலியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் கைதானவர்களுக்கு குட்கா கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ரூ.35 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story