பாம்பன் பகுதியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்த முடிவு
பாம்பன் பகுதியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தாலுகா பகுதிகளில் 12 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இதில் தற்போது ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அகற்றப்பட்டு பாம்பன் பகுதியில் மட்டும் 3 கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த கடைகளையும் அகற்றக்கோரி நேற்று பாம்பனில் அனைத்து அரசியல் கட்சியனர், சமுதாய சங்கங்கள், மகளிர் அமைப்பினர்,பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் முனியசாமி வரவேற்றார். முஸ்லிம் ஜமாத் சார்பில் ஜமால், அபிபுல்லா, இந்து பரிபாலனசபை சார்பில் தலைவர் முருகேசன், பரவர் நலப்பேரவை சார்பில் அடைக்கலம், பட்டங்கட்டியார் பேரவை சார்பில் பால்ராஜ், வர்த்தக சங்கம் சார்பில் அயூப்கான், சமூக ஆர்வலர் தில்லைபாக்கியம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பாம்பனில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளையும் உடனே அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 9–ந்தேதி மாலை 3 மணிக்கு பாம்பன் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. கிராம சபை அவசர கூட்டத்தை கூட்டுவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் 3 டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை என்றால் பாம்பன் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.