ஆதிவாசி மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் மோசடி - போலீசார் விசாரணை


ஆதிவாசி மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் மோசடி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 5 March 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் மோசடி நடைபெறுவதாக ஆதிவாசி மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புலிகள் காப்பக வனப்பகுதியில் ஊராட்சி அமைந்து உள்ளதால் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வனத்துறை தடை விதித்து உள்ளது. இதற்காக போஸ்பாரா என்ற இடத்தில் வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதேபோல் பெண்ணை வனத்திலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வனத்தில் பலதலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்களை வெளியேற்றி மாற்றிடம் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2008-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதுமலை ஊராட்சி மக்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் அல்லது ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் பணம் மற்றும் நில மோசடி செய்யப்படுவதாக ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக மனுக்களும் வழங்கி உள்ளனர். அதில் பணம் மற்றும் நில மோசடி செய்த இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகனிடமும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையொட்டி ஆதிவாசி மக்களின் கோரிக்கையை ஏற்று முதுமலை ஊராட்சி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடந்த சில தினங்களாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் ஆதிவாசி மக்களுக்கு பட்டா இல்லாத அரசு நிலம் வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் பண மோசடி செய்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து முதுகுளி மறுவாழ்வு சங்க துணை தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் ஏராளமானவர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இது சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்து ஆதிவாசி மக்கள் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆதிவாசி மக்கள் பலருக்கு பட்டா இல்லாத நிலம் வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. வனத்தில் இருந்து வெளியேறும் திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்காத வனத்தில் நிலம் ஒதுக்கப்படுகிறது. இது சம்பந்தமாக விரிவான விசாரணை நடத்தினால் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வனத்துறை தரப்பில் விசாரித்த போது மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story