தஞ்சையில், சினிமாவை மிஞ்சும் வகையில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட ஊழியரை வெட்ட கத்தியுடன் பாய்ந்த வாலிபர்


தஞ்சையில், சினிமாவை மிஞ்சும் வகையில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட ஊழியரை வெட்ட கத்தியுடன் பாய்ந்த வாலிபர்
x
தினத்தந்தி 6 March 2019 3:45 AM IST (Updated: 6 March 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட ஊழியரை கத்தியுடன் வெட்ட வாலிபர் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அன்பு பணியில் இருந்தார். அப்போது மானோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சந்திரகுமார் (25), மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர், ரூ.100-க்கு பெட்ரோல் போடும்படி கூறினார். அதன்படி அன்பு பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரகுமார், என்னிடமே பணம் கேட்கிறாயா? என தகராறு செய்துள்ளார். பின்னர் பெட்ரோல் பங்கில் இருந்து சற்று தூரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு கத்தியுடன் அன்புவை வெட்டுவதற்காக ஓடி வந்தார்.

அதைப்பார்த்த அன்பு அங்கிருந்து ஓடினார். அப்போது அங்கிருந்த மற்றொரு ஊழியர் தான் வைத்திருந்த இரும்பு தகரத்தால் சந்திரகுமாரின் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டார். இதனால் அவர் கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் ஒப்படைத்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சந்திரகுமாரை கைது செய்தனர். தஞ்சையில் சினிமாவை மிஞ்சம் வகையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story