கோவில் சொத்துகளை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அறநிலையத்துறை ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் சொத்துகளை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு, இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது. சென்னை திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது-
மதுரை,
மதுரையின் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று கள்ளழகர் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக பல பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் கோவில் சொத்துகள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த சொத்துகளை முறையாக பராமரிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை மேலும் சிறப்பாக கொண்டாடலாம்.
எனவே கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்கவும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை அழகர் கோவில் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனுதாரர் நேரில் ஆஜராகி, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துகளின் விவரம் பழைய அறிக்கையாகும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமான சொத்துகள், கட்டிடங்களாக, வணிக வளாகமாக, விளை நிலங்களாக தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ளன. கோவில் சொத்துகளின் விவரங்களை கோவில் வளாகத்திலேயே பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கோவில் வரலாறு, அதன் பழமை, சிறப்பு பற்றியும் தகவல் பலகைகள் வைக்கலாம். இதன்மூலம் கோவில் சொத்துகள் பாதுகாக்கப்படும். இதை நடைமுறைப்படுத்த ஏற்கனவே பல்வேறு சுற்றறிக்கைகளை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுப்பியும், கோவில் நிர்வாக அதிகாரிகள் அதை பின்பற்றவில்லை” என்றார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், “அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கட்டிடக்கலையுடன் அமைக்கப்பட்ட கோவில்கள், அவற்றின் சொத்துகளை நம்மால் பாதுகாக்க முடியவில்லை” என்று தெரிவித்தனர்.
பின்னர், தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துகளை பாதுகாப்பது குறித்தும், அது தொடர்பான சுற்றறிக்கைகள், கோவில்களின் நலன் சார்ந்த சுற்றறிக்கைகளை அமல்படுத்த உரிய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? என்பது குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வருகிற 18-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story