அரக்கோணம் அருகே, 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.1½ லட்சம் கொள்ளை - பூட்டுகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
அரக்கோணம் அருகே 2 டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே கும்பினிபேட்டையில் இருந்து புதூர்கண்டிகை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக பாஸ்கரனும், விற்பனையாளராக ரமேசும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலை நேரம் முடிந்ததும் வழக்கம்போல் மது விற்பனையான கணக்கை சரி பார்த்து பணத்தை மேஜை டிராயரில் வைத்தனர்.
இந்த கடையில் 7 பூட்டுகள் உள்ளன. பணத்தை மேஜை டிராயரில் வைத்தபின் இருவரும் கடையை மூடிவிட்டு 7 பூட்டுகளையும் பூட்டியபின் வீட்டிற்கு சென்றனர்.
நள்ளிரவு அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ஏட்டு சதீஷ் மற்றும் போலீசார் அந்த வழியாக ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து உயர் அதிகாரிகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தினருக்கும் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கடையின் மேற்பார்வையாளர் பாஸ்கரன், விற்பனையாளர் ரமேஷ் ஆகியோர் சென்று பார்த்தனர். கடையில் பூட்டப்பட்டு இருந்த 7 பூட்டுகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று மேஜை டிராயரில் வைத்திருந்த 1 லட்சத்து 39 ஆயிரத்து 340 ரூபாயை திருடிச் சென்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆனால் மதுபாட்டில்கள் எதுவும் திருடப்படவில்லை.
இதேபோல் கும்பினிபேட்டையில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள மதுபான கடையிலும் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.17 ஆயிரத்து 630-ஐ திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து கடையின் மேற்பார்வையாளர் வீரராகவன், விற்பனையாளர் சவுந்திரராஜன் ஆகியோர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். 2 கொள்ளை தொடர்பாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்தார்.
2 கடைகளிலும் பணத்தை கொள்ளையடித்தவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடிப்பதற்காக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையின் பூட்டுகளில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. பழைய குற்றவாளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story