ராமநாதபுரம் அருகே, 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - 2 பேர் பலி


ராமநாதபுரம் அருகே, 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா வேன்-மீன் ஏற்றிச்சென்ற வேன் நேருக்கு நேர் மோதின. அப்போது பின்னால் வந்த காரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

பனைக்குளம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுற்றுலா வேன் மூலம் ராமேசுவரத்துக்கு புறப்பட்டு வந்தனர். நேற்று காலை 6 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி சாத்தக்கோன்வலசை அருகில் அந்த வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது பாம்பனில் இருந்து ராமநாதபுரம் நோக்கி மீன் ஏற்றிச்சென்ற சரக்கு வேனும், பல்லடத்தில் இருந்து வந்த சுற்றுலா வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அப்போது பின்னால் வந்த கார் ஒன்றும் விபத்தில் சிக்கியது.

இதில் 3 வாகனங்களும் நொறுங்கின. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மீன் ஏற்றி வந்த சரக்கு வேன் டிரைவரான பாம்பனை சேர்ந்த உமர் அலி (வயது 45), சுற்றுலா வேனில் இருந்த பல்லடம் பகுதியை சேர்ந்த மிகுனக்குமார் (37) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த பல்லடத்தை சேர்ந்த பழனியம்மாள்(60), லதா (45), கார்த்திக் (29), முருகசாமி (53) ஆகிய 4 பேருக்கு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த பல்லடம் சின்னச்சாமி(70), விக்னேசுவரன்(25), சூலூர் செல்வக்குமார்(23) ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் புற நோயாளியாக ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

காயம் அடைந்த விக்னேசுவரன், செல்வக்குமார் ஆகியோர் காரில் வந்தவர்கள் ஆவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story