மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று தர்மபுரியில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தர்மபுரி,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழுவினர் தமிழக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகள், அதற்கான தீர்வுகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்ட இந்த குழுவினர் தர்மபுரி நகரில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். அப்போது பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு முன்பே மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் பொறியாளர்கள் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தகைய செயல்பாடு தமிழக மக்களுக்கு பேரிடியாக உள்ளது.

தமிழகத்தின் நலனுக்கு எதிரான இத்தகைய செயல்பாட்டிற்கு முடிவு கட்ட மேகதாது அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தி.மு.க. தெளிவுபடுத்த வேண்டும். ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் ராசிமணல் பகுதியில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தடுப்பணை கட்டினால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் விளைநிலங்களில் நிலத்தடி நீரை சேமித்து வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொடரும் வறட்சியால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் தொடர் வறட்சிக்கு தீர்வுகாண நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story