கொடைக்கானல் நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கீழ்குண்டாறு திட்டம் 3 மாதங்களில் முடிவடையும் - அதிகாரி தகவல்
கொடைக்கானல் நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கீழ்குண்டாறு திட்டம் 3 மாதங்களில் முடிவடையும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அப்சர்வேட்டரி பகுதியில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பதன் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்ததால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் மனோரத்தினம் என்ற புதிய அணை கட்டப்பட்டது.
இந்த 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டினால் கூட அவற்றின் மூலம் சுமார் 8 மாதங்களுக்கு மட்டுமே நகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதனால் அடிக்கடி நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நட்சத்திர ஏரியின் அருகில் உள்ள ஜிம்கானா பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இதன்படி கோடை காலத்தில் நகர் பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதுவும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக தீர்ப்பதற்காக கீழ்குண்டாறு என்ற இடத்தில் அருவியில் இருந்து விழும் தண்ணீரை தடுப்பணை கட்டி தேக்கி கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது. இதற் கான திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ரூ.46 கோடியே 91 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின.
இந்த திட்டத்தின் படி கீழ்குண்டாறு பகுதியில் இருந்து சுமார் 4.2 கி.மீட்டர் தூரத்துக்கு தலா 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் தினமும் 60 லட்சம் தண்ணீர் அப்சர்வேட்டரி பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த பணிகளை நேற்று நகராட்சி ஆணையாளர் முருகேசன், பொறியாளர் சாகுல் அமீது, மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறியதாவது:-
கொடைக்கானல் நகரில் தினமும் குடிநீர் வினியோகம் செய்வதற்காக கீழ்குண்டாறு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கீழ்குண்டாறு பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்துக்குள் பணிகள் முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள கணக்கெடுப்பின்படி நகரில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக நகரில் 42 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் அமைக் கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகரில் உள்ள வீடுகளுக் கான குடிநீர் இணைப்புகளில் தற்சமயம் 2 ஆயிரத்து 400 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் 2 ஆயிரம் இணைப்புகள் இணைக்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து நகர் பகுதிக்கு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு நகர் பகுதியில் தட்டுப்பாடு இன்றி வறட்சி காலங் களில் கூட குடிநீர் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடைக்கானல் மக்களின் நீண்டகால கனவு திட்டமான கீழ்குண்டாறு திட்டம் நிறைவேறுவதால் தினமும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story