பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த சேவை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த சேவை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 March 2019 4:30 AM IST (Updated: 6 March 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசின் சமூக நல மற்றும் சத்துணவு திட்ட துறை சார்பில் பெண்களின் பிரச்சினைக்கு ஒரே இடத்தில் தீர்வு காண ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி சேவை மையத்தை தொடங்கிவைத்தார். மேலும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு குறுந்தகட்டையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

பெண்களின் பிரச்சினைக்கு ஒரே இடத்தில் தீர்வு காண ஒருங்கிணைந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினையால் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், காதலிப்பதாக கூறி ஆண்களால் கைவிடப்படும் பெண்கள், முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்டந்தோறும் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் நிர்வாக அலுவலர், பெண் காவலர், செவிலியர், மனநல ஆலோசகர், வக்கீல் ஆகியோர் பணியில் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த உதவி மைய அழைப்பாணை எண் 181 என்ற தொலைபேசி எண் மூலம் பயன்பெறலாம்.

இது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காகவே அமைக்கப்பட்ட சேவை ஆகும். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள், தங்களது பிரச்சினைகளுக்கு 181 என்ற இலவச தொலைபேசி சேவை எண்ணை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பிச்சம்மாள், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரஸ்வதி, மாவட்ட சமூகநல அலுவலர் மீனா, குடும்பநலம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் தயாளன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் குபேந்திரன் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story