கொள்முதல் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்


கொள்முதல் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல் மூட்டைகளை குடோன்களுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி கொள்முதல் நிலைய தொழிலாளர்கள் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுந்தரக்கோட்டை,

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் அறுவடை பருவத்தையொட்டி நெல் கொள்முதல் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், அரவை ஆலைகளுக்கோ, சேமிப்பு குடோன்களுக்கோ கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆலைகள் மற்றும் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

இதனால் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் குடோன்களுக்கு எடுத்து செல்ல வெண்டும்.

கொள்முதல் பணியாளர்களுக்கு பாகுபாடின்றி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் உள்ள நுகர் பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன்பு கொள்முதல் நிலைய தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நாகேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் புண்ணீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில நிர்வாகிகள் குணசேகரன், சுப்பிரமணியன், தனபதி, மாவட்ட நிர்வாகிகள் கலியபெருமாள், கணேசன், வேலாயுதம், விஜயகுமார் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story