கொள்ளிடம் அருகே மதுக்கடை கட்டும் பணிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கொள்ளிடம் அருகே மதுக்கடை கட்டும் பணிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2019 3:45 AM IST (Updated: 7 March 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே மதுக்கடை கட்டும் பணிக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு அருகே கால்நடை மருத்துவமனைக்கு எதிரே கடைத்தெருவையொட்டி உள்ள நிலத்தில் நேற்று முன்தினம் திடீரென மதுக்கடை ஊழியர்கள், மதுக்கடை கட்டும் பணியை தொடங்கினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் மதுக்கடை கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். இந்தநிலையில் நேற்று மீண்டும் மதுக்கடை ஊழியர்கள் மேற்கண்ட இடத்தில் மதுக்கடை கட்டும் பணியை தொடங்கினர். இதனை கண்டித்து வணிகர் சங்கத்தினர் கோதண்டபுரத்தில் உள்ள கடைகளை அடைத்தனர்.

பின்னர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவ-மாணவிகள் பாட்டில்களில் உள்ள மதுவை கீழே ஊற்றி மதுக்கடைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பொதுமக்கள், மதுக்கடை கட்டும் பணியை தடுக்க முயற்சித்தனர். அதற்குள் மதுக்கடை ஊழியர்கள் மதுக்கடை கட்டும் பணியை நிறுத்திவிட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மேற்கண்ட இடத்தில் மதுக்கடை திறக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story