பொள்ளாச்சியில், நகைக்காக தோழியை கொன்ற பெண் கைது - பரபரப்பு வாக்குமூலம்
பொள்ளாச்சியில் நகைக்காக தோழியை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கெட்டிமல்லன்புதூரை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி பொன்னுத்தாய் (வயது 55). இவர் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் குஞ்சிபாளையத்தில் உள்ள தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து கிடந்தது பொன்னுத்தாய் என்பது தெரியவந்தது. பொன்னுத்தாய் கொலை செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை.
இதனால் நகைக்காக கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்னுத்தாயை வேலைக்கு அழைத்து செல்லும் அவரது தோழி கெட்டிமல்லன்புதூரை சேர்ந்த ராமாத்தாள் (55) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்து ராமாத்தாள் வெளியூருக்கு தப்பி செல்ல பஸ்சிற்காக சிங்காநல்லூர் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். கைதான ராமாத்தாள் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
செலவுக்காக ஆங்காங்கே பணம் வாங்கியதால் கடனாகி விட்டது. கடனை திருப்பியும் செலுத்த முடியவில்லை. இதனால் வெளியில் எங்கு சென்றாலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அவமானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் என்னுடன் வேலைக்கு வரும் பொன்னுத்தாய் கழுத்தில் தாலிக் கொடியும், மூக்கில் மூக்குத்தி, காதில் கம்மல் அணிந்திருப்பார். இதனால் அவரை கொலை செய்து நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.
கடந்த 2-ந்தேதி அம்பராம்பாளையத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைக்கு செல்வதற்கு நடந்து சென்றோம். பேசிக் கொண்டே சென்றதால் மாலை 6.15 மணி ஆகிவிட்டது. இனி வேலைக்கு சென்றால் உள்ளே விட மாட்டார்கள். குஞ்சிபாளையத்தில் உள்ள ரவி என்பவரின் தொழிற்சாலைக்கு சென்றால் வேலை கிடைக்கும் என்று அங்கு அழைத்து சென்றேன்.
அம்பராம்பாளையத்தில் இருந்து நடந்து சென்றதால் இரவு 10 மணி ஆகி விட்டது. தொழிற்சாலையில் யாரும் இல்லை. இதனால் அங்கேயே தங்கி விட்டு காலையில் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினேன். ஏற்கனவே அங்கு வேலைக்கு வந்ததால் அந்த தொழிற்சாலையின் சாவி இருக்கும் இடம் எனக்கு தெரியும். எனவே சாவியை எடுத்து தென்னை நார் கொட்டி வைத்திருக்கும் அறையை திறந்து உள்ளே சென்று தூங்கினோம்.
முகத்தில் தூசி விழாமல் இருக்க பொன்னுத்தாய் துணியால் மூடி இருந்தார். அவர் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து அங்கிருந்த கம்பி பொருத்தப்பட்டு இருந்த ஒரு கம்பால் முகத்தில் ஓங்கி அடித்தேன். இதில் முகத்தில் கம்பி குத்தி ரத்த வெள்ளத்தில் பொன்னுத்தாய் பிணமானார். இதையடுத்து அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து விட்டு, காலை துணியால் கட்டி இழுத்து வந்து வெளியே போட்டு விட்டு வீட்டிற்கு சென்றேன். இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்து தப்பி செல்ல முயன்ற போது என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story