பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை: டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அத்தனூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் சமத்துவபுரம் அருகே 70 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி அண்ணன் குடும்பத்தினர் கட்டிப்பாளையம் சென்று விட்டனர். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.
இந்த நிலையில் அன்று காலையில் மூதாட்டி ரத்தபோக்குடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனையில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் விளைவாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அத்தனூர் பாரதிநகரை சேர்ந்த கோழிப்பண்ணை தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (வயது 39). அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வடிவேல் (39) ஆகியோர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வக்கீல் சுசீலா வாதாடினார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, வடிவேல் ஆகிய 2 பேருக்கும் நீதிபதி இளங்கோ ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேருக்கும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் கோவை சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story