காரிமங்கலம் அருகே பஸ் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்


காரிமங்கலம் அருகே பஸ் கவிழ்ந்து 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 March 2019 4:00 AM IST (Updated: 7 March 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே அரசு பஸ் ரோட்டில் கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரிமங்கலம், 

பெங்களுருவில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவைக்கு ஒரு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 23 பயணிகள் இருந்தனர். பஸ்சை ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த வேட்டைகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகன் (35) என்பவர் பணியில் இருந்தார். நள்ளிரவு 3 மணியளவில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பைசுஅள்ளி அருகே பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது, அந்த பஸ்சுக்கு முன்னால் வாணியம்பாடியிலிருந்து கேரளாவிற்கு வெல்ல பாரம் ஏற்றி சென்ற லாரியை, பஸ் டிரைவர் கருணாகரன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பஸ், லாரியின் இடதுபுறம் மோதியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் ரோட்டில் கவிழ்ந்்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் பெங்களுரு கனகபுரா ரோடு ரவி (50), திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த கார்த்திக் (31), தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி முத்தம்பட்டி கலைமணி(23), ஓமலூர் பூமிநாயக்கன்பட்டி முருகேசன்(38), புதுக்கோட்டை ஜெயராமன்(36), உடுமலைப்பேட்டை நித்யானந்தம்(26), பஸ் கண்டக்டர் முருகன், பெங்களுரு எலக்ட்ரானிக் சிட்டி அன்வர்லால்(42), ஓசூர் ஜீவாநகர் வெங்கடேசன்(52), கோவை இசக்கிதுரை(20), டிரைவர் கருணாகரன், ஓசூர் சோனச்சி(48) ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியாளர்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். காரிமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் கிருஷ்ணகிரி -தர்மபுரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story