கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே விழுப்புரத்தில் 102 டிகிரி கொளுத்திய வெயில் - பொதுமக்கள் கடும் அவதி


கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே விழுப்புரத்தில் 102 டிகிரி கொளுத்திய வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 6 March 2019 8:24 PM GMT)

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே விழுப்புரத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் விழுப்புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 93 டிகிரி முதல் 97 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதலே நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி 100 டிகிரியையும் கடந்து 102 டிகிரியாக பதிவானது.

இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பெண்கள் துப்பட்டா மற்றும் சேலையால் தலையை போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது.

தொடர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெரும்பாலானோர் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கொளுத்திய வெயிலால் கானல் நீர் தோன்றியது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் சாலையோரங்களில் கரும்புச்சாறு, நுங்கு, பழச்சாறு, தர்பூசணி, வெள்ளரிப்பழங்களை விற்பனை செய்ய புதிது, புதிதாக கடைகள் முளைத்துள்ளன. இதனை வாங்கி பருகி பொதுமக்கள், வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தங்களை காத்து வருகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே தற்போது வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் வாடி, வதங்கி வருகின்றனர். கத்திரி வெயில் காலம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Next Story