நாகர்கோவிலில் போலி ஆர்.சி.புக் தயார் செய்து நிதிநிறுவன உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி 9 பேர் கைது


நாகர்கோவிலில் போலி ஆர்.சி.புக் தயார் செய்து நிதிநிறுவன உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி 9 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் போலி ஆர்.சி.புக் தயார் செய்து நிதிநிறுவன உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் ஏ.கே.புரம் வயல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவர் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் சற்குண வீதியில் 3 நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறேன். எனது நிறுவனத்தில் ஏராளமானோர் தங்களது மோட்டார் சைக்கிளுக்கான ஆர்.சி.புக். மற்றும் ஆவணங்களை கொடுத்து பணம் பெற்று மாத மாதம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த மதன், குமார், பகவதிபெருமாள், செய்யது இம்ரான், நிஷாத், முருகன், சம்சீர், அஜீன் மற்றும் சங்கர் ஆகிய 9 பேர் அடிக்கடி மோட்டார் சைக்கிளுக்கான ஆர்.சி.புக் கொடுத்து பணம் வாங்கினார்கள்.

அந்த வகையில் தற்போது வரை மொத்தம் 40 வாகனங்களுக்கான ஆர்.சி.புக் கொடுத்து ரூ.20 லட்சத்து 4 ஆயிரத்து 500 வரை வாங்கி உள்ளனர். ஆனால் தவணை பணத்தை சரியாக செலுத்தவில்லை. இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் என்னிடம் கொடுத்த ஆர்.சி.புக்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தேன். அப்போது 9 பேரும் கொடுத்த ஆர்.சி.புக் போலியாது என்பது தெரியவந்தது. போலியான ஆர்.சி.புக்கை அவர்கள் தயார் செய்துள்ளனர்.

இந்த போலி ஆர்.சி.புக் மூலம் என்னிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை மேற்கொண்டார். அப்போது மதன் உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களுக்கு ஆர்.சி.புக்கை போலியாக தயார் செய்து, அதில் வட்டார போக்குவரத்து அலுவலக முத்திரை மற்றும் கையொப்பம் ஆகியவற்றையும் போலியாக போட்டது தெரியவந்தது. இந்த நூதன மோசடிக்கு மதன் தான் முதுகெலும்பாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 9 பேர் மீதும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீதாராமன் வழக்கு பதிவு செய்தார். பின்னர் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story