பல்லடம் அருகே காற்றாலை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன்நகை திருட்டு காரில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை


பல்லடம் அருகே காற்றாலை மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன்நகை திருட்டு காரில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 6 March 2019 10:10 PM GMT (Updated: 6 March 2019 10:10 PM GMT)

பல்லடம் அருகே காற்றாலை மேலாளர் வீட்டின் பூட்டை, காரில் வந்த மர்ம ஆசாமிகள் உடைத்து 6 பவுன்நகையை திருடி சென்று விட்டனர்.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள சின்னூர் பொன்நகரை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 40).இவர் பெரியகுமாரபாளையத்தில் உள்ள காற்றாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பல்லடம்–உடுமலை சாலையில் பேக்கரியும் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). சிவில் என்ஜினீயர். இவர்களுக்கு அக்ஷையா (13), புனிதா (11) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அக்ஷையா அங்குள்ள பள்ளியில் 7–ம் வகுப்பும், புனிதா 6–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மைக்கேல், பெரியகுமாரபாளையம் சென்று விட்டார். குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். இதையடுத்து ராஜேஸ்வரியும் வீட்டை பூட்டி விட்டு பல்லடத்திற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இவருடைய வீட்டின் முன்பு சொகுசு கார் ஒன்று வந்து நின்றதாகவும், அந்த காருக்குள் ஒருவர் இருந்ததாகவும், மற்றொருவர் காரில் இருந்து இறங்கி சுற்றுச்சுவர் மீது ஏறிக்குறித்து வீட்டிற்குள் சென்றதாகவும், சிறிதுநேரத்திற்கு பிறகுஅந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும், அருகில் உள்ளவர்கள் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி பதற்றத்துடன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருந்த நிலையில் அதில் வைக்கப்பட்டு இருந்து துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்து இருந்த கம்மல், பிரேஸ்லெட், மோதிரம் என மொத்தம் 6 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மைக்கேலும், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் வெளியில் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், மைக்கேல் வீட்டிற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன்நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story