உடன்குடி அருகே, ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - 6 பேருக்கு வலைவீச்சு


உடன்குடி அருகே, ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு - 6 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே தொழில் போட்டியில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

குலசேகரன்பட்டினம்,

உடன்குடி சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சுடலை. இவருடைய மகன் சப்பாணி முத்து (வயது 27). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன்கள் ஆட்டோ டிரைவர்களான வேல்முருகன், பிச்சையா தாஸ் ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்தது.

சம்பவத்தன்று சப்பாணி முத்து உடன்குடி அருகே வேதகோட்டைவிளை வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகன், பிச்சையா தாஸ், அவர்களுடைய அண்ணன் முத்துகிருஷ்ணன், நண்பர்களான நம்பி மகன் விஜய், உடன்குடி சோமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ஞானசேகர், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த தாமோதரன் ஆகிய 6 பேரும் சேர்ந்து சப்பாணிமுத்து ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர்.

அந்த 6 பேரும் சேர்ந்து ஆட்டோவுக்குள் இருந்த அவரை வெளியே இழுத்து சென்று சரமாரியாக தாக்கியதுடன், அரிவாளால் வெட்டினர். அவரது ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் கிடைத்தவுடன் குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த சப்பாணி முத்துவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபால் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேல்முருகன் உள்ளிட்ட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story