வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் ‘திடீர்’ போக்குவரத்து மாற்றம்


வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் ‘திடீர்’ போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 7 March 2019 10:30 PM GMT (Updated: 7 March 2019 11:28 AM GMT)

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே பேலஸ்கபே சந்திப்பில் ‘திடீர்’ போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆற்காடு ரோடு, காட்பாடி ரோடு பகுதிகளில் ஏற்கனவே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. முக்கியமாக புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள கிரீன் சர்க்கிள் மற்றும் புதிய பஸ்நிலையத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

கிரீன்சர்க்கிளில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு பஸ்கள் செல்வது, பஸ்நிலையத்தில் இருந்து வெளியில் வருவதில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியே வரும் சென்னை செல்லும் பஸ்கள் கிரீன் சர்க்கிள் பகுதியில் சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையில் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த நாளே இந்த திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழையபடியே பஸ்கள் செல்லும் வகையில் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பேலஸ்கபே சந்திப்பில் நேற்று திடீரென்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதுவரையில் மக்கான் சந்திப்பு பகுதியில் இருந்து சி.எம்.சி. மற்றும் சத்துவாச்சாரி பகுதிக்கு செல்லும் வாகனங்கள் பேலஸ் கபே சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி காட்பாடி ரோட்டில் சென்று திரும்பி வரவேண்டும். அதேபோன்று ஆற்காடு ரோடு மற்றும் சி.எம்.சி. பகுதியில் இருந்து காட்பாடிக்குசெல்லும் வாகனங்கள் மக்கான் சந்திப்பு சென்று திரும்பி வரவேண்டும்.

தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் மக்கானில் இருந்து வரும் வாகனங்கள் பேலஸ் கபே சந்திப்பில் இடதுபுறமாக திரும்பாமல் நேராக ஆற்காடு ரோட்டில் செல்லலாம். அதேபோன்று சி.எம்.சி. பகுதியில் இருந்து காட்பாடிக்கு செல்ல வேண்டுமானால் மக்கான் சிக்னலுக்கு செல்லாமல் பேலஸ் கபே சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி விடலாம்.

இந்த போக்குவரத்து மாற்றம் தற்காலிகமாக செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு வரவேற்பு கிடைத்தால் நிரந்தரமாக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story