5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து : 10–ந் தேதி வழங்கப்படுகிறது


5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து : 10–ந் தேதி வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 5:55 PM IST)
t-max-icont-min-icon

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வருகிற 10–ந் தேதி வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர்,

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் 1995–ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஒரே தவணையாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது.

திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் இப்பணியினை செயல்படுத்த 1,081 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கிற சுங்கச்சாவடிகளிலும் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப் பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணியில் பொது சுகாதார துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட 4,304 பணியாளர்களும், மேற்பார்வையிட 142 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான சொட்டு மருந்துகள் எடுத்து செல்வதற்காகவும் திருப்பத்தூர் சுகாதார மாவட்டம் முழுவதும் பிறதுறை மற்றும் சுகாதார துறை வாகனங்கள் உள்பட 53 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

பெற்றோர்கள் இம்முகாமினை பயன்படுத்தி பச்சிளங்குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். இது முற்றிலும் பாதுகாப்பானது.

பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் முழுமையாக பங்கேற்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், முகாம்களில் சொட்டுமருந்து கொடுத்து இளம்பிள்ளைவாத நோயற்ற வருங்கால சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை திருப்பத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தேவபார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.


Next Story