தஞ்சையில், தூக்கில் இளம்பெண் பிணம் கொலை செய்து தொங்கவிடப்பட்டாரா? போலீசார் விசாரணை


தஞ்சையில், தூக்கில் இளம்பெண் பிணம் கொலை செய்து தொங்கவிடப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 2019-03-08T00:09:48+05:30)

தஞ்சையில், தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார். அவரை யாரும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ளது தங்கம் நகர். இங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் சாலை ஒரத்தில் ஒரு காலிமனை உள்ளது. இந்த காலிமனையில் உள்ள ஒரு மரத்தில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். சுடிதார் அணிந்திருந்த அந்த பெண், சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் பிணமாக தொங்கிய பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

அந்த பெண் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அழைத்து வந்து கொலை செய்து அந்த பெண் தூக்கில் தொங்குவது போன்று தொங்க விட்டனரா? என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story