ஓசூரில் பரபரப்பு தம்பதியை கடத்தி நகை, பணம் பறிப்பு 2 பேர் கைது


ஓசூரில் பரபரப்பு தம்பதியை கடத்தி நகை, பணம் பறிப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2019 4:00 AM IST (Updated: 8 March 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் தம்பதியை கடத்தி நகை, பணத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர், 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சர்வேஸ்வரன் (வயது 46). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபிரியா (39). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இருவரும் பெங்களூரு விமான நிலையத்திற்கு தங்களின் சொகுசு காரில் சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பாகலூர் - மாலூர் சாலையில் தனியார் சொகுசுவிடுதி அருகில் அவர்கள் வந்த போது மற்றொரு காரில் 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று தாங்கள் ஓட்டி வந்த காரை சர்வேஸ்வரன் சென்ற காரின் முன்புறமாக நிறுத்தினார்கள்.

இதனால் சர்வேஸ்வரன் தனது காரை நிறுத்தினார். அதன் பிறகு காரின் கண்ணாடியை உடைத்த கும்பல் கத்தி முனையில் ஸ்ரீ பிரியா அணிந்திருந்த 16 பவுன் நகைகள் மற்றும் அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்தனர். மேலும், அவர்களை கடத்தி பணம் பறிக்க அந்த கும்பல் திட்டமிட்டது. இதையடுத்து அந்த கும்பலில் 2 பேர் சர்வேஸ்வரன் வந்த காரில் ஏறி அவர்களை கடத்தினார்கள். மற்ற 6 பேரும் அவர்கள் வந்த காரில் முன்னால் சென்றனர்.

சர்வேஸ்வரனின் காரில் இருந்த 2 பேரும், அவர்களிடம், உங்களின் உறவினர்களை ரூ.10 லட்சம் எடுத்து வரச்சொல்லுங்கள். உங்களை உயிருடன் விட்டு விடுவோம். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் கணவன் - மனைவி இருவரும் செய்வதறியாது திகைத்தனர். இதற்கிடையே 2 கார்களும் பாகலூர் - பேரிகை சாலையில் சத்தியமங்கலம் பக்கமாக சென்று கொண்டிருந்தது. அப்போது கார் வழி தவறி தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் பாதையில் சென்றது. இதையொட்டி கணவன் - மனைவி 2 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர்.

இதைக் கேட்ட அப்பகுதி மக்கள் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என அறிந்து அந்த கும்பலை துரத்திக் கொண்டே ஓடினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளை கும்பல் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றது. அதில் 2 பேருக்கு மட்டும் காலில் அடிபட்டு ஓட முடியாமல் அந்த இடத்திலேயே விழுந்தனர். மற்ற கொள்ளையர்கள் 6 பேரும் அவர்கள் வந்த காரில் நகை, பணத்துடன் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிடிபட்ட 2 கொள்ளையர்களையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த கதிர்வேல், கோவிந்தராஜ் என தெரிய வந்தது. இந்த சம்பவம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story