கூட்ட நெரிசலை தவிர்க்க திண்டுக்கல்-வேடசந்தூர் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்


கூட்ட நெரிசலை தவிர்க்க திண்டுக்கல்-வேடசந்தூர் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 March 2019 3:15 AM IST (Updated: 8 March 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

கூட்ட நெரிசலை தவிர்க்க திண்டுக்கல்-வேடசந்தூர் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாடிக்கொம்பு, 

திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் தாடிக்கொம்பு உள்ளது. இதனை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதியே கிடையாது. இந்த கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பூக்கள் திண்டுக்கல்லில் உள்ள மார்க்கெட்டுக்கு தான் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதற்காக விவசாயிகள் பஸ் வசதி இல்லாததால் தாடிக்கொம்புக்கு வந்து, அங்கிருந்து பஸ்கள் மூலம் திண்டுக்கல் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதுதவிர இந்த பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

ஆனால் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இதனால் தாடிக்கொம்பு பஸ் நிலையத்துக்கு முன்னதாக பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். ஒரு சில பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினாலும், ஏறுவதற்கு கூட இடம் கிடைப்பதில்லை. வேறுவழியின்றி மாணவர்களும், பொதுமக்களும் கூட்ட நெரிசலில் அந்த பஸ்சில் ஏறி செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மதுரை, சென்னை, திருச்சி, நெல்லை போன்ற நகரங்களில் பெண்களுக்கு என்று தனியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் திண்டுக்கல்-வேடசந்தூர் மார்க்கத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பெண்களுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். இல்லையெனில் அந்த மார்க்கமாக கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story