குடிநீர் கேட்டு துறையூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு துறையூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு துறையூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

துறையூர்,

துறையூரை அடுத்துள்ள காளியாம்பட்டி மற்றும் சிங்களாந்தபுரம் நெசவாளர் காலனி ஆகிய கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வரவில்லை. இது பற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பலமுறை நேரில் சென்று பொதுமக்கள் மனு கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து நேற்று துறையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டனர்.

இதை அறிந்த ஒன்றிய ஆணையர் சகுந்தலா மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார ஆணையர் ஜெசித்தா ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்த வேண்டும். புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 2 கிராமங்களையும் இணைத்து, தங்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இது பற்றி உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்த னர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்ட கலெக்டரிடம் சென்று மனு கொடுப்பதோடு, சாலை மறியலிலும் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் துறையூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story