நெல்லை அருகே, லாரியை மடக்கி சோதனை செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது
நெல்லை அருகே லாரியை மடக்கி சோதனை செய்த போலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பை பால்பண்ணை தெருவை சேர்ந்த கண்ணையா மகன் இசக்கி பாண்டி. இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு இவரது லாரியை டிரைவர் ஓட்டிச்சென்றார். லாரிக்கு சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளில் இசக்கிபாண்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாபநாசம் மெயின் ரோட்டில் அவரது லாரியை சாதாரண உடையில் இருந்த ஒருவர் மடக்கி நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்துவதை பார்த்தார். அந்த நபர் டிரைவரிடம், லாரியின் ஆவணங்களை கேட்டுள்ளார். அவற்றை எடுத்து வர லாரியை நோக்கி டிரைவர் சென்றார். இதை கவனித்த இசக்கிபாண்டி, சோதனையில் ஈடுபட்ட நபரை தூரத்தில் இருந்து கண்காணித்தபோது, அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் அம்பை போலீஸ் துணை சூப்பிரண்டு சாகிர்உசேனுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னனும் விரைந்து சென்றனர். அங்கு லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்த நபரை அவர்கள் பிடித்து விசாரித்தனர். அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி லாரி டிரைவரிடம் விசாரித்தது தெரியவந்தது.
மேலும் அவர், போலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பது உறுதியானது. அவரிடம் இருந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்ற போலியான அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
போலீசாரிடம் சிக்கிய போலி சப்-இன்ஸ்பெக்டர் ஊட்டியைச் சேர்ந்த ஷெரீப் மகன் அப்பாஸ் (வயது 32). பி.எஸ்.சி. பட்டதாரியான இவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே அவருக்கும், அம்பையை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனால் அவர் அம்பையில் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இங்கு வாடகை கார் டிரைவராக வேலை செய்தார்.
இந்த நிலையில்தான் அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அப்பாசை அம்பை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று அவர் வேறு எங்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சப்-இன்ஸ்பெக்டர் சிக்கிய சம்பவம் அம்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story