டி.கல்லுப்பட்டி அருகே, டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்


டி.கல்லுப்பட்டி அருகே, டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 7 March 2019 11:03 PM GMT (Updated: 7 March 2019 11:03 PM GMT)

டி.கல்லுப்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது காரைகேணி. இந்த கிராமத்தில் ஈசானிபாறை என்ற இடத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை கடந்து தான் காரைகேணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு டாஸ்மாக் கடையால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மது குடிக்க வரும் நபர்கள், மதுபாட்டில்களை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வீசி செல்வதால் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே காரைகேணி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை புதிதாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கும், டி.கல்லுப்பட்டி போலீசாருக்கும் கிராம மக்கள் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடந்தன.

இந்தநிலையில் நேற்று காரைகேணி கிராம மக்கள், டி.கல்லுப்பட்டிக்கு வந்தனர். அப்போது அவர்கள், காரைகேணியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story