மயிலம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
மயிலம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலம்,
மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு சந்தைமேடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த 22-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள்களில் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சங்கர்(வயது 43) என்பவரை அரிவாளால் வெட்டி ரூ.47 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் மேற்பார்வையாளரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த சீனிவாசன் (வயது 31), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த அஜய்தேவன் (20) ஆகிய 2 பேரையும் கடந்த 25-ந்தேதி கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள், வீச்சரிவாள், கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றநபர்களை திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
இதில் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கள்ளர்குளம் கிராமத்தை சேர்ந்த அங்குசாமி மகன் ரவிக்குமார்(41) என்ற ராக்கப்பன் என்பதும், கூட்டேரிப்பட்டு டாஸ்மாக் மேற்பார்வையாளர் சங்கரை வெட்டி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த அரிவாள், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1,300-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட ரவிக்குமார் பிரபல ரவுடி என்பதும், அவர் மீது சென்னை, துரைப்பாக்கம், சிவகங்கை, வந்தவாசி, கும்மிடிப்பூண்டி, காஞ்சீபுரம், கோட்டூர்புரம், சீர்காழி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகள், 10 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story